ஈராக் (கனவு தேசம் சிதைக்கப்பட்ட வரலாறு)
ஏழாயிரம் ஆண்டுகால வரலாறைக் கொண்ட ஒரு நாடு; சுமேரியர், அக்கடியர், அசிரியர் போன்ற மன்னர்களின் ஆட்சியில் பல்வேறு வகையான முன்னேற்றங்களைக் கண்ட ஒரு நாடு; சிற்ப கட்டடக் கலைகளுக்கு சான்றாக விளங்கும் பாபிலோனிய தொங்கும் தோட்டம் முதல் முதன்முறையாக நிரந்தர ராணுவம் முதலிய அரசியல் வழிமுறைகளை செயல் படுத்திய ஒரு நாடு; சக்கரம், நீர்பாசனம், காலண்டர் உள்பட பல்வேறு பொருட்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நாடு, ஒரு அல்லது ஒருசில நாடுகளின் சுயநலத்தாலும், வர்த்தகம் முதலிய காரணங்களினாலும் சிதைக்கப்பட்டு, இனி மேலெழுந்து வருவது சந்தேகம் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது என்றால் அதற்கு மிகப்பெரிய உதாரணம் ஈராக்.
ஈராக்கின் பெருமை கணக்கிலடங்காதது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கான உரிமைகளை சமநிலைப் படுத்தியதும், விவாகரத்து உரிமை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதும் வரலாறு காட்டும் உண்மை.
உலகின் முதல் காவியம் இங்குதான் படைக்கப்பட்டுள்ளது. கூனிபார்ஃம் என்ற முக்கோண வடிவ முத்திரைக் காவியமாக இது படைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வரலாறுகளைக் கொண்ட ஒரு நாட்டில் ஆரம்பம் முதலாகவே ஏற்றத் தாழ்வுகளும் பிரிவினைகளும் இருந்து வந்ததை சாபக்கேடாகவே கொள்ள வேண்டும். இத்தகைய ஏற்றத்தாழ்வுகளும், கருப்புத் தங்கம் எனப்படும் க்ரூட் ஆயிலும் ஒருங்கிணைந்து அங்கு இருந்ததால் காலங்காலமாகவே அந்நியரின் கழுகுப் பார்வைகளில் தப்ப இயலாமல் இந்த நாடு இருந்துள்ளது.
அண்டை மாநிலங்களான ஈரான், சவுதி போன்ற நாடுகளிடம் சுமூக மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு முன்னேற்றப் பாதையில் நடை போட்டிருக்க வேண்டிய இந்த நாடு, ஈரான், குவைத் போன்ற நாடுகளிடம் நட்புறவை வளர்க்கத் தவறியதால், எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்த ஆதிக்க சக்திகளின் வலையில் தாமாகவே போய் மாட்டிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
மேலும் ஆதிக்க சக்திகளுடன் ஆராய்ந்து உறவு கொண்டிருக்க வேண்டிய அரசு, நெருக்கடி நிலை காரணமாகவோ, அரசியல் நிலை காரணமாகவே ஒப்பந்தங்கள் போட்டதும் அந்நியர்களை தாமே வரவேற்பதற்கு இடம் கொடுத்துள்ளது. ஈரான் ஈராக் போரில் ஈராக்கிற்கு மறைமுகமாக உதவி புரிந்த அமெரிக்கா அந்தப் பக்கம் சென்று குவைத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈராக்கின்மீது படைத் தொடுத்துள்ளது உச்ச கட்ட அரசியல் தந்திரம்.
மன்னராட்சி நடைபெற்றுவரும் நாடுகளும் சுதந்திரமாக அரசாட்சி செய்து கொண்டிருக்க, மக்களாட்சி நடந்துவந்த ஈராக்கில் வெடிகுண்டுத் தாக்குதல்களும், படுகொலைகளும் மலிந்துள்ளதற்கு காரணம் என்ன என்ற மக்களின் ஆதங்கங்களுக்கு வரலாற்றை முன்வைத்து, அமெரிக்காவின் அரசியல் தந்திரங்களையும் பட்டியலிட்டிருக்கிறது பாவை சந்திரன் எழுதி வெளிவந்துள்ள ஈராக் என்ற நூல்.
இத்தகைய அரசியல் குறுக்கு புத்திகளுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது வர்த்தகம் என்பதையும் இந்த நூல் எடுத்துக் காட்டுகிறது.
உள்நாட்டில் கட்டுப்பாட்டைக் கொண்டுவர முயற்சி செய்த சதாமின் நிலையையும், அதற்காக அவர் மேற்கொண்ட சில அடக்குமுறைகள் அந்த நேரத்தின் தேவை என்பதையும் குறிப்பிட இந்த நூல் மறக்கவில்லை.
ஆதிக்க சக்திகளின் தந்திரங்களால் ஏற்பட்ட இந்தப் போரினால் ஈராக்கின் பொருளாதார சிதைவு, குழந்தைகள் உள்பட நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்ட உடல்நலக் குறைபாடுகள் முதலியவை எடுத்துரைக்கப் பட்டுள்ளன.
ரசாயன உயிரி ஆயுதம் தயாரிக்கப்படவில்லை என்று தங்கள் நாட்டு நிபுணர்களே தெரிவித்த பின்பும் தாக்குதல்களைத் தொடர்ந்த அமெரிக்காவின் சுயநலப்போக்கிற்கு ஈராக்கின்மேல் இருந்த வர்த்தகக் காதல் காரணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நூலில் பிற்சேர்க்கையாக க.நா.சுப்ரமணியம் மொழிபெயர்த்த ‘கில்காமெஷ் காவியத்தின்’ முன்னுரையும், அரேபியாவில் ஆதிக்க சக்திகளுக்கு உதவி புரிந்த லாரன்ஸ் என்பவரின் வரலாற்றைக் கூறும் லாரன்ஸ் ஆஃப் அரேபியாவின் திரைக்கதையும் சேர்க்கப் பட்டுள்ளது சீரிய முயற்சி. அந்நாட்டு மன்னர்களின் வாழ்க்கை நிலைகளைப் பறைசாற்றும் கண்டுபிடிப்புகளும், தற்காலத்திய வரலாற்றையும் கட்டியம் கூறும் புகைப்படங்களை அங்காங்கே இணைத்திருப்பது கருத்திற்கு மட்டுமல்லாது பார்வைக்கும் நலம் பயக்கிறது.
ஈராக் பற்றிய வரலாற்று தெளிவை இந்த நூல் ஏற்படுத்தியிருப்பதை வரவேற்கலாம். உலகத்தின் கனவு தேசமாக இருந்திருக்கக்கூடிய ஈராக் உலக நாடுகளின் கண்முன்னே சிதைக்கப்பட்டுள்ளது. ஆதிக்க சக்தியின் அடுத்த இலக்குகளும் உலக மக்களின் கண்முன்னேயே குறிவைக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆயினும் உலக நாடுகள் மௌனம் சாதித்து வருகின்றன என்ற உண்மையை அச்சுறுத்தல் இல்லாமல் தெளிவாக உணர்த்திய ஆசிரியரைப் பாராட்டலாம்.
ஈராக்
ஆசிரியர்: பாவை சந்திரன்
வெளியீடு: கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்
#92/66, டி.எஸ்.வி. கோயில் தெரு,
மயிலாப்பூர்,
சென்னை – 4.
பக்கங்கள்: 228
விலை: ரூ. 100
ஆண்டு: டிசம்பர் 2004.
மரணத்திற்கு மரணம் தீர்வாகுமா?
மனிதர்கள் நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள் என்பதும் கிடைத்ததை உண்டு தாங்கள் செல்லும் இடங்களில் தங்களுடைய குடிப்பகுதிகளை நிர்மாணித்துக் கொண்டு வாழ்ந்தார்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆற்றுவழி சமுதாயத்திற்கு மனித இனம் மாற்றம் பெற்றபோதே, தான், தனக்கு என்ற கொள்கைகள் வலுப்பெறத் தொடங்கின. மது, பொன், பெண், பொருள் போன்றவற்றிற்கான தேடல்களும் அதுகுறித்த போராட்டங்களும் அத்தகைய காலகட்டங்களிலேயே தொடங்கின.
பிறகு ஒரு தலைவனுக்குகீழ் வாழ சமுதாயம் முற்பட்டபோது குற்றங்கள் வரைமுறை செய்யப்பட்டு அதற்கான தீர்வுகளும் காணப்பட்டன. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் போன்ற வகையான தண்டனைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன. மரண தண்டனை என்பதும் இத்தகைய மன்னராட்சி காலத்தில்தான் மனித இனத்தில் வேரூன்ற ஆரம்பித்தது.
ராஜ்யங்களுக்காகவும், பெண்களுக்காகவும் தங்களுடைய ஆளுமைத்திறனை வெளிக்காட்டுவதற்காகவும், தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் மரண தண்டனையை ஆயுதமாகப் பயன்படுத்தினார்.
இதிலும் ஒரே குற்றத்திற்கு உயர்ந்த ஜாதியினருக்கு ஒரு தண்டனையும் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு கொடுமையான தண்டனைகளும் கொடுக்கப்பட்டதையும் வரலாறு பதிவு செய்துள்ளது.
பழம்பெருமை பேசும் உலக நாடுகளின் வரலாற்றை புரட்டினால், அதில் ரத்தவாடை வீசுவதைத் தவிர்க்க முடியாது. போர் முதலிய காரணங்களுக்காக மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை அது தெரிவிக்கும்.
ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றங்களுக்கு உட்படும் நாடுகளில் புதிதாக பதவியில் அமரும் ஆட்சியாளர்கள், முந்தைய ஆட்சியினர் மீதான தங்களின் பழியுணர்வை அந்த நாட்டை அழித்து தீக்கிரையாக்குவதன் மூலமும் அதன் மக்களைக் கொன்று குவிப்பதன் மூலமுமே தீர்த்துக் கொண்டார்கள் என்பதும் வரலாறு காட்டும் உண்மை.
இதற்கு ஆதாரங்களாக நம் நாட்டின் சேர, சோழ பாண்டியர்களின் வரலாறுகளையும், உலக அளவில் ஏற்பட்ட உலகப்போர்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
மன்னராட்சி மாறி மக்களாட்சி ஏற்பட்டபின்பு சட்டங்களின் துணைகொண்டு பகிரங்கமாக மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தற்போதைய காலகட்டத்திலும் மனித நேயத்துக்கு மாறான இந்த இழிநிலை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.
உணர்வு ரீதியாகவோ, மதம், கொள்கை சார்ந்தோ உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு நடத்தப்படும் கொலைகளுக்கு மரண தண்டனைதான் தீர்வாக இருக்க வேண்டும் என்பது இல்லை.
ஒரு மனிதன் தன்னுடைய தவறை நினைத்து திருந்துவதற்கான வாய்ப்பைக் கொடுப்பதற்கு முன்பே அவனை தூக்கில் போடுவதால் சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை என்பதே உண்மை.
தற்காலத்தில் பெருகிவரும் வெடிகுண்டு கலாச்சாரங்களுக்கும் வன்முறை சம்பவங்களுக்கும் மரண தண்டனை தீர்வாக முடியாது. மாறாக அவர்களை அத்தகைய சூழ்நிலைக்கு உட்படுத்தும் காரணிகளைக் களைய முற்படுவதே அரசுகளின் கடமையாக இருக்க வேண்டும். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமுதாயத்தின் அடிப்படை தீமைகளை விரட்ட முயன்றால் இத்தகைய வன்முறை கலாச்சாரங்கள் மெல்ல பின்வாங்கும் என்பது உறுதி.
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முயலும் அரசால், வன்முறைகளையும் வெடிகுண்டு கலாச்சாரத்தையும் குறைக்க இயலும்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் முதன்முறையாக சட்டபூர்வமாக மரணதண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைக்கு பதிலாக ஜாமீனில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 1963ஆம் ஆண்டிலிருந்து அந்த மாநிலத்தில் யாரும் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை என்று அந்த நாட்டினர் நெஞ்சுயர்த்துகிறார்கள்.
ஐரோப்பிய நாடுகளும், லத்தீன் அமெரிக்க நாடுகளும் மரண தண்டனை ஒழிப்பை வரவேற்றுள்ளன. ஆனால் அரபு நாடுகள் இதை எதிர்க்கின்றன.
ஒரு மரண தண்டனைக் கைதி சிறையில் பல வருடங்களைக் கழிக்க நேரும்போது, அந்த புதிய சூழலில் அவருக்கு மனமாற்றம் ஏற்படலாம். புத்தகங்கள் முதலியவற்றின் துணைகொண்டு நல்ல இயல்பையும் அவர் பெற வாய்ப்புகள் அதிகம். வெளியே வரும்போது அவருக்கான வாழ்க்கைச் சூழல்களையும் அரசு ஏற்படுத்தித் தரலாம். இதன்மூலம் குற்றங்கள் குறையும். இதைவிடுத்து, அவரின் செயலால் ஏற்பட்டுள்ள பாதகங்களை அவர் உணரும் முன்னரே அவருக்கு மரணதண்டனை கொடுக்கப்படுவதால் என்ன பயன்?
சூழ்நிலையின் கோரப்பிடியில் சிக்கி பாதகங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை என்பது கண்டிப்பாக நிரந்தர தீர்வாக இருக்க முடியாது. அவர்களின் சந்ததிகளை மனதில் வைத்து ஒரு நிரந்தர தீர்மானம் ஏற்படுத்த வேண்டும்.
சென்ற தலைமுறையில் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும், பண்பாட்டையும் போதித்துவந்த நிலை தற்போது மாறியுள்ளது. குழந்தைகளை தங்களின் கனவுகளை ஏற்றும் பொம்மைகளாக மாற்றிவரும் தற்காலத்திய பெற்றோர்களே இத்தகைய வன்முறைக் கலாச்சாரங்களுக்கும் காரணமாக இருக்கின்றனர்.
குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அவர்களுக்கு எதிராக சமுதாயம் ஏற்படுத்தும் மாற்றங்கள் பெரும்பாலும் அவர்கள் அழிவுப்பாதையில் செல்லவே வழிவகுக்கும். பெரியவர்களின் வார்த்தைகளுக்கும் அனுபவங்களுக்கும் மதிப்புக் கொடுத்துவந்த இளைய தலைமுறையினர், தற்காலத்தில் கிடைக்கும் வாழ்க்கை சூழல்களால், மாறிவரும் சமூக மாற்றங்களால் வன்முறை மனங்களைக் கொண்டவர்களாகவே வளர்கின்றனர்.
மாறிவரும் சமூக நிலைமைகளில் அதிகப்படியான வன்முறைகளுக்கு மன்னிப்பு வழங்குதல் என்பது நடைமுறை சாத்தியமாக இருக்காது; இதனால் சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது போன்ற வாதங்களை மரண தண்டனை ஒழிப்பிற்கு எதிரானவர்கள் முன் வைக்கலாம். ஆனால் எந்த மனிதனும் பிறக்கும்போதே குற்றவாளியாகப் பிறப்பதில்லை. அவனுடைய வாழும் சூழல் மற்றும் அவனது வாழ்வில் அவன் எதிர்நோக்கும் பற்றாக்குறைகளே குற்றங்களுக்கான காரணிகளாக இருக்கின்றன.
வன்முறைக்கு தீர்வு வன்கொலையாக இருக்க முடியாது என்பதை நினைவில் நிறுத்தி உலக நாடுகள் அனைத்தும் இணைந்து மரணதண்டனைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்கும் திட்டவட்டமான செயல்பாடாக அது இருந்தால், சமுதாய முன்னேற்றத்திற்கான நல்ல தீர்வாக அது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.