அன்னிய மண்ணில் அநாதைகளாய். . .

நவம்பர் 17, 2007 at 12:45 பிற்பகல் (Article)

பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு இடஒதுக்கீடு சமஉரிமை என்று பேசிக்கொண்டு இருக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. அதற்கு சமூக அரசியல் காரணங்களும் துணையாக இருந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் இலங்கைப் பெண்களைப் பற்றி தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை. அவர்கள் நாட்டில் வாழ வழியின்றி போரும், அரசியல் காழ்ப்புணர்ச்சியும் அவர்களைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. அந்தத் துரத்தல்களிலிருந்து தப்பிக்க அவர்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பாலியல் பலாத்காரங்களிலும் குண்டு மழையிலும் தப்பித்து அகதிகளாக சொந்த இனங்களுக்குள்ளாகவே வாழ்ந்து வரும் அவலம் அவர்களுக்கு இருப்பதை மறுத்தற்கில்லை. அகதிகள் முகாம்களில் அளிக்கப்படும் நிவாரணங்களிலும் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் உள்ளது.

அண்டை தேசங்களில் அகதிகளாக வாழ விருப்பம் இல்லை. வேலைத் தேடி அயலகங்களுக்கு செல்கிறோம் என்று அவர்கள் செல்ல முற்படும் அவர்கள் சந்திக்கும் துயரங்கள் ஏராளம். படித்தவர்களுக்கு ஓரளவிற்கு நல்லவழி கிடைப்பதுண்டு. ஆனால் படிக்காமல் அரேபிய நாடுகள் போன்றவற்றில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை மிகவும் பரிதாபமாகவே உள்ளது. வறுமை காரணமாக முகம் தெரியாத ஊரில், தனது குடும்பத்தைப் பிரிந்து யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, அரசின் ஆதரவும் அற்ற நிலையில் அவர்கள் வாழும் நிலை காணப்படுகிறது.

அரேபிய நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் பலவகைகளிலும் துன்புறுத்தப் படுகிறார்கள் என்று அமெரிக்காவிலிருந்து செயல்படும் மனித உரிமைக் கண்காணிப்புக் குழு ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் அவர்களுக்கான உரிமைகளை மீட்டுத் தரத் தவறிவிட்டது என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அரேபிய நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் எவ்வாறெல்லாம் துன்புறுத்தப் படுகிறார்கள் என்று அது 131 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அரேபிய நாடுகளில் 6 லட்சத்து 60 ஆயிரம் இலங்கை பெண்கள் வீட்டு வேலைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு நடைமுறையில் உள்ள தொழிலாளர் உரிமை சட்டங்கள் வீட்டு வேலையில் உள்ள தொழிலாளர்களுக்கு செயல்படுத்தப்படுவதில்லை என்று நியூயார்க்கிலிருந்து வெளியிடப்படும் ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

அங்கு வீட்டு வேலைக்குப் போகும் இலங்கைப் பெண்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு, குறிப்பிட்ட வேலைநேரம், சுதந்திரமான செயல்பாடு ஆகியவை அற்ற சூழ்நிலையே உள்ளது என்று மனித உரிமை கண்காணிப்பின் பெண்கள் உரிமை ஆய்வாளர் ஜெனிபர் டர்னர் தெரிவித்துள்ளார்.

வேலைக்கு வருபவர்களின் பாஸ்போர்ட்டை முதலாளிகள் பிடுங்கி வைத்துக் கொண்டு அவர்களைத் தொடர்ந்து வேலை செய்ய பணிக்கின்றனர். ஒரு சிலர் அவர்களைத் தொடர்ந்து ஒருநாளில் 16 முதல் 21 மணிநேரம் வரை வேலை வாங்குகிறார்கள். சிலரோ பல மாதங்கள் வருடங்கள் வரை அவர்களது சம்பளத்தை பிடித்து வைத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கான சம்பளம் கொடுக்கப்பட்டாலும் ஒப்பந்தத்தில் பேசிய அளவை விட குறைவான சம்பளமே அவர்களுக்குத் தரப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வேலை செய்யும் இடத்தில் சிறை வைக்கப்படுதல், பட்டினிப் போடுதல், உடல் மற்றும் வார்த்தை ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியவை அவர்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது என்று மனித உரிமை கண்காணிப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பாலியல் பலாத்காரங்கள் மற்றும் வன்முறைகளுக்கு ஆட்படுத்தப்படும் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற பலாத்காரங்களில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் கர்ப்படைந்துள்ளனர் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டிய சட்ட வழிமுறைகள் அவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. வீட்டு வேலை செய்பவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற, அவர்கள் வேலை செய்யும் முதலாளியின் அனுமதி வாங்க வேண்டும் என்ற சவூதியின் சட்டமும் அவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு ஒரு காரணம் என்று மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

தங்கரசு ஜெயந்தி என்ற இளவயது இலங்கைப் பெண் அவருடைய எஜமானரால் பெரும் இடையூறுக்கு ஆளாகியுள்ளார். அவள் வேலை செய்த வீட்டில் இருந்தவர்கள் தினமும் அவளை அடித்துள்ளனர். இறுதியாக அவர்கள் பிடித்துத் தள்ளியதில் கீழே விழுந்த ஜெயந்திக்கு மணிக்கட்டு உடைந்துள்ளது. கடுமையானத் தாக்குதலுக்கு ஆளான அவரின் முகம் பெருமளவிற்கு வீங்கியுள்ளது. அவருடைய உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. அவருடைய காதில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவளைக் கத்தியால் அவர்கள் வெட்டியுள்ளனர். தினந்தோறும் உதைத்து அவளைக் கட்டிப்போட்டு, அவளுக்கு உணவுத் தர மறுத்துள்ளனர்.

பஹ்ரைனில் வேலைக்கு சென்ற மற்றொருவருக்கு, தினமும் உணவு கொடுக்க மறுத்துள்ளனர். அவர்கள் வீட்டிலுள்ள பூனை சாப்பிட்டு மீதம் வைத்துவிட்டு போன உணவை சாப்பிட இவர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

பெரும்பாலும் படிக்காத, ஆனால் எண்ணெய் கிணற்றின் வளத்தில் பணக்காரர்களாக உள்ள அரேபிய நாட்டு பெண்கள் மற்றும் ஆண்கள் தான் இத்தகைய கொடுமைகளை நிகழ்த்துகின்றனர். 19 அரேபியர்களுக்கு 1 வேலைப்பெண் என்ற அளவில் அங்கு இலங்கையிலிருந்து வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் இலங்கையை ‘வேலையாட்களின் நாடு’ என்றே அழைக்கின்றனர்.

இலங்கையின் மூதூர் பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண் ரிஷானா நபீக் என்பவர். 19 வயதாகும் இவர் 4 மாதக் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சவூதி அரேபியாவில் சட்டத்தின் பிடியில் இருக்கிறார்.

இந்தப் பெண் இந்தக் கொலையை செய்ததாகக் குறிப்பிடப்படும் 2005-ல் இவருக்கு வயது 17. அகிய உலக சட்டப்படி இளம் பெண்களை வேலைக்கு அமர்த்துவது, அதிலும் வெளிநாட்டில் வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். இவர், தான் அந்தக் குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் அறிக்கைக் கூறுகிறது. அதற்குக் காரணம் அவருக்குப் புரியாத மொழியில் விசாரிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்தவிதமான சட்ட உதவியும் அளிக்கப்படவில்லை.

இவர் கொன்றதாகக் கூறப்படும் குழந்தை பால் குடிக்கும்போது தொண்டையில் பால் சிக்கி இறந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டு வேலைக்கு என்று அழைத்து செல்லப்பட்ட ரிஷானா வீட்டு வேலைகளுடன் பத்துக் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளும் வேலையும் தனக்கு கொடுக்கப்பட்டதாகவும், தன்னை வேலைக்கு வைத்திருந்த குடும்பத்தினர் தன்னை மிகவும் கொடுமைப் படுத்தியதாகவும் தன்னுடைய குடும்பத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளதாக ரிஷானா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆனால் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை அதைக் குடிக்க முடியாமல் திணறியபோது அதைத் தடுக்கவே தான் குழந்தையின் கழுத்தைத் தடவியதாக இவர் கூறுகிறார்.

ஒரு 17 வயதுப் பெண்ணுக்கு 4 மாதக் குழந்தையைப் பராமரிக்கும் அளவிற்கு பக்குவம் இருக்குமா என்பது கேள்விக்குறியே. ஆனால் அவர் 10 குழந்தைகளைப் பராமரித்துக் கொண்டிருந்துள்ளார். வயதும் அனுபவமும் இல்லாத ஒரு பெண்ணை அத்தகைய வேலைக்கு அனுப்பி வைத்த ஏஜென்ஸி, அத்தகைய அனுபவ முதிர்வு அற்ற பெண்களை வேலைக்கு வைத்துக் கொண்டவர்கள் மற்றும் இதை அனுமதித்த அரசாங்கம் ஆகியவையே இந்த இடத்தில் குற்றவாளியாக நிற்க வைக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் ரிஷானா குற்றவாளியாக்கப் பட்டுள்ளார்.

தன்னுடைய ஊரில் உள்ள சபீக் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த ரிஷானா, தன் குடும்பத்தின் வறுமை காரணமாக சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். 17 வயதான இவருக்கு 23 வயது என்று பொய்யான ஆவணங்களை உருவாக்கி அவரை அனுப்பி வைத்த ஏஜென்ஸி ஆட்கள் கண்டனத்துக்கு உரியவர்கள். இவ்வாறு வயதை மாற்றி அனுப்பி வைப்பது என்பது இலங்கையில் சாதாரணமாக நடந்து வருகிறது. கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அரசு அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக கண்மூடித்தனமாக நடந்துக் கொள்வது வருத்தத்திற்குரியது.

இத்தகைய துன்புறுத்தல்களைத் தடுக்க வேலைக்கு ஆட்களை எடுக்கும் தரகர்கள் மற்றும் அமைப்புகளை இலங்கை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மனித உரிமைக் கண்காணிப்புக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு பெண்களை வேலைக்கு அனுப்புவதற்கான சட்டதிட்டங்களை இலங்கை அரசு கடுமையாக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பல லட்சக்கணக்கான அப்பாவிப் பெண்களைப் பலவிதமான கொடுமைகளிலிருந்து காப்பாற்ற உதவும்.

மறுமொழியொன்றை வழங்குக