கொங்கைத்தீ

அக்டோபர் 27, 2007 at 12:57 பிற்பகல் (Article)

பொறுமைக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் ஒரு பெண்ணுக்குள் இருக்கும் சீற்றம் எத்தகையது, அது எவ்வளவு தூரம் தீவிரமானது என்பதை நிரூபித்தவள் கண்ணகி. தன் கணவன் தன்னை விட்டு நீங்கினாலும் அவனுக்கு அதனால் மகிழ்ச்சி கிடைக்கிறதே என்ற மனநிறைவுடன் அப்பழுக்கில்லா வண்ணம் வாழ்ந்திருந்த கண்ணகி எவ்வாறு தன் கொங்கைத்தீயின் மூலம் ஒரு மாநகரத்தையே எரிக்கும் அளவிற்கு சக்தியும் துணிவும் பெறுகிறாள்? எந்தெந்த சம்பவங்கள் அவளை அதற்குத் தூண்டுகின்றது என்று கூறும் காப்பியம் சிலப்பதிகாரம்.

இந்தக் காப்பியத்தை நவீனப்படுத்தி, பெண்களின் மனநிலையில் கூறமுற்பட்டிருந்தனர், எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி மாணவிகள். வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நாரதகான சபாவில் நடைபெற்ற இந்த நாடக அரங்கேற்றத்தில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதற்கு எழுத்து வடிவம் கொடுத்திருந்தவர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. இந்த காப்பிய நாடகத்திற்கு செயல்வடிவம் கொடுத்து இயக்கியவர் கர்ணா பிரசாத். ஏறக்குறைய 1 மாத காலமாக பயிற்சி கொடுத்து இந்த நாடகத்தை அரங்கேற்றியதாக அவர் கூறிய செய்தி, நடித்த அனைவரது நடிப்பாற்றலிலும் வெளிப்பட்டது.

பெண் காளியின் வடிவம். அவளுக்குள்ளிருந்து பிறந்ததே தெய்வப் பாத்திரங்களாக நாம் உருவகப்படுத்தும் கண்ணகி, திரௌபதி, மாதவி போன்றவர்கள் என்ற கருத்தினை நாடகத்தின் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தியிருந்தது சிறப்பு.

தன்னுடைய வீட்டுக் கடமைகளை ஆற்றிக் கொண்டே அதில் தன் வாழ்வின் முழுமையை காணுமாறு வளர்க்கப்பட்ட பெண், வறியோர்களை போற்ற வேண்டுமானால் தன் கணவன் உடனிருக்க வேண்டுமே என்று கவலையுறும் அளவிற்கு இருக்கும் ஒரு பெண்ணிடம் கலை மிளிரும் அழகுணர்வை வெளிப்படுத்தும் செயல்களை எதிர்பார்த்த கோவலனின் அறியாமை நாடகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணகியின் தோழிகள் மற்றும் கோவலன் தோழர்கள் என இரு குழுவினரை வைத்து இரதரப்பு நியாயங்களைப் பேசவைத்திருப்பது நல்ல முயற்சி. கண்ணகியின் தோழி தேவந்தியின் குழுவினர் சூழ்நிலையை பெண்ணிய நோக்கோடு அணுகியிருப்பதும் நல்ல முயற்சி. கோவலன் மாதவியிடம் இருந்து திரும்பி வந்ததும் ‘சிலம்பு உள்ளது கொள்ளுங்கள்’ என்று கூறும் கண்ணகியையும் தன்னுடன் மதுரைக்கு அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம் என்ன? என்று கேள்வி எழுப்பும் இவர்கள், அதற்கான காரணமாக, கோவலன் எப்போதும் தேடல் உடையவன். அது கலைஞர்களுக்கே உள்ள இயல்பு. அவனுக்கு பூம்புகார் என்ற சிறிய வட்டத்திற்குள் இருந்து சலிப்பாகி விட்டது. அதைவிடுத்து உலகைக் காண விழையும் அவனுக்கு மனைவி கண்ணகியின் கற்பே அரண் என்று கூறியிருப்பது வித்தியாசமான மாற்றுச் சிந்தனை.

கண்ணகியை மதுரைவரை வழிநடத்தும் கவுந்தியடிகள் இவள் போகும் வழியெங்கும் உள்ள காட்டின் அதிர்வைத் தாங்குவாளா என்று கேட்பதும், அதற்கு கண்ணகி வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் பலவிதமான அதிர்வைத் தாங்கியவண்ணம்தான் தான் இருந்ததாகக் கூறுவதும் சமுதாயத்தில் பெண்ணின் நிலையைக் குறிப்பிடுவதாக உள்ளது.

மதுரையில் கணவன் இறந்த விஷயத்தைக் கேள்வி பட்டதும், பூம்புகாரில் தான் கணவன் இருந்தும் கைம்பெண், மதுரையில் கணவன் இறந்ததால் கைம்பெண் என்று கண்ணகிக் கூறுவதாக இடம்பெற்றுள்ள இடங்கள் விவாதங்களுக்கான புதிய தளங்களைத் தோற்றுவிக்கின்றன. மேலும் தான் கைம்பெண்ணாக வாழ மாட்டேன் என்று கண்ணகி சூளுரைப்பதும் கோடிட்டுக் காட்ட வேண்டிய பகுதியாகும்.

மேலும் ‘தன் கணவன் கள்வன்’ என்று பாண்டிய மன்னன் கூறும் இடத்தில், ‘ஆமாம் அவன் கள்வன்தான், கணிகையரின் உள்ளம்கவர் கள்வன்’ என்று கண்ணகி கூறுவதாக வருமிடங்கள் பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெற்று விடுகின்றன.

பாண்டியன், கண்ணகி யார் மனிதகுலப்பெண்ணா? பிடாரியா? என்று கேட்கும் இடத்தில்… ‘ஆம் நான் மனிதகுலப்பெண், தவறுகண்ட இடத்து பிடாரி, கொடுமை கண்டு எழும்போது கொற்றவை…  அநீதி இழைக்கப்படும் இடத்தில் பத்ரகாளி…’ என்று கூறும் இடங்களில் எழுத்துவடிவம் கொடுத்த இந்திரா பார்த்தசாரதியின் கைவண்ணம் தெரிகிறது.

இறுதியில், தன் தவறை உணர்ந்த பாண்டியன் இறக்கும் இடத்தில், ‘பெண்மையின் சீற்றத்திற்கு இதுவே முதல் பலி’ என்று கண்ணகி கூறுவதுபோல் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆசிரியர் முன்நிற்கிறார்.

மாதவியாக இரண்டுபேர் களமிறங்கியிருப்பது புதுமை முயற்சி. ‘மாதவியின் கலைக்கு விலையில்லை. ஆனால் அவளுக்கு விலையுண்டு’ என்று கூறுமிடங்களில், தன் விருப்பத்திற்காக கணிகையர் என்ற ஒரு இனத்தையே ஏற்படுத்தி வைத்திருந்த ஆண் சமுதாயத்தின் ஆதிக்கநிலை மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. கோவலன் மாதவியை ‘பொதுஇடத்தில் ஆடக்கூடாது’ என்று கூறுமிடத்திலும் ஆண்சார்பு கொள்கைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

யானையிடமிருந்து ஒரு முதியவரையும், காவல்பூதத்திடம் பாதிக்கப்பட்ட ஒருவருக்காக போராடும்போது நல்ல பண்பிற்குரியவனாக காட்டப்படும் கோவலன், எவ்வாறு ஆணாதிக்க உணர்வுடன் செயல்பட்டான் என்பதையும் காட்சிக்கு காட்சி நினைவூட்ட நாடகக்குழுவினர் தவறவில்லை. அழகிருந்தும் அதைப்புரிந்துக் கொள்ள இயலாவிடில், அருகிருந்தும் அது வீண் என்று கண்ணகியைப் பார்த்து கோவலன் கூறுவதாக அமைந்திருந்த இடங்கள் சிறப்பு.

இத்தகைய அழகிய சொல்லாடல்களைப் பயன்படுத்திய இந்தரா பார்த்தசாரதியை பாராட்ட வேண்டும். பல இடங்களில் இத்தகைய சொல்லாடல்கள், இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தை நம்கண்முன் நிறுத்துவதாக அமையப் பெற்றுள்ளது.

நடித்தவர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். அதிலும் கோவலன் மற்றும் கண்ணகியாக பாத்திரமேற்றிருந்த மாணவிகள் கவனிக்கத் தக்கவர்கள். மாதவியை அவளுடைய அரங்கேற்றத்தில் அறிமுகம் செய்யும் இடத்தில் ஒரு சிறிய நாட்டிய நிகழ்வையே மேடையேற்றியிருந்த இயக்குனர் கர்ணா பிரசாத் பாராட்டுக்குறியவர்.

காட்சிக்குக் காட்சி மேடைத் தோற்றத்தை மாற்றி அமைத்திருந்ததும் சிறப்பு. யானை போன்றவற்றை காட்சிப் படுத்தியிருந்ததைப் பாராட்டியே தீர வேண்டும். கொற்றவை தெய்வத்தையும், சாமியாடல் முதலியவற்றையும் நம் கண்முன்னே கொண்டுவந்த இயக்குனர் மற்றும் ஒப்பனையாளர் கவனத்திற்குரியவர்கள். கண்ணகி நல்ல நிலையில் இருக்கும்போது ஒரு ஒப்பனையும், அவளே கோவலனால் வறுமைக் கோலம் கொண்டபோது வேறொரு ஒப்பனையும் என்று மாற்றியிருந்தது மற்றும் ஒளியமைப்பு முதலியவையும் மிக அருமையாக மேடையேற்றப்பட்டிருந்தது.

பெண்ணடிமைத்தனத்தை முதன்முதலில் கூறிய குடிமக்கள் காப்பியம் சிலப்பதிகாரம். அதில் பெண்ணியக் கருத்துக்களை, அந்தப் பெண்களின் வலி மற்றும் மனக்குமுறல்களை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தியிருந்தது சிறப்பு. முழுவதும் பெண்களாலேயே அரங்கேற்றப் பட்டிருந்த இதைப்போன்ற  நாடகங்கள் பெண்ணிய வரலாற்றில் முக்கிய இடம் பெறும். கொங்கைத்தீ பல்வேறு தளங்களில் பார்வையாளர்களின் மனதில் தீமூட்டியது.

மறுமொழியொன்றை வழங்குக