பிஞ்சு மனம்
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படுமா?
தாத்தா-பாட்டி ஆகியோரின் மடியில் செல்லம் கொஞ்சிக் கொண்டு அவர்களின் கைகளால் ஊட்டப்படும் உணவினை அவர்களைக் கொஞ்சமாவது சிரமப்படுத்தி விட்டு உண்பது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் கூறும் கதைகளை செவிமடுப்பது, தாய் தந்தையின் வழிகாட்டுதலின்படி நடப்பது, தம்பி-தங்கை அல்லது அண்ணா-அக்கா இவர்களிடம் செல்லச் சண்டையிடுவது, இவையனைத்திற்கும் இடையில் கல்வியிலும் கவனம் செலுத்துவது, விடுமுறை நாட்களில் உறவினர்கள் வீட்டில் இன்பமாக காலம் கழிப்பது இதெல்லாம் தான் சிறிது காலத்திற்கு முன்பு குழந்தைகளின் இயல்பான வாழ்க்கையாக இருந்தது.
தற்போதைய குழந்தைகளின் நிலையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. காலையில் அரக்கப்பரக்க தூங்கியும் தூங்காமலும், சாப்பிட்டும் சாப்பிடாமலும் பள்ளிக்கு செல்வது, பள்ளி முடிந்ததும், கிரீச் போன்றவற்றிடம் தஞ்சமடைவது, அதன்பின்பு பாட்டு, கராத்தே, போன்றவற்றில் கவனம் செலுத்துவது, வீட்டிற்கு திரும்பினாலும் தாய்-தந்தையரின் அன்பு போதுமான அளவில் கிடைக்காத நிலையில் ஏங்குவது போன்ற நிலையே உள்ளது. தாய்-தந்தையரின் அன்பு கிடைக்காதது ஒரு நிலை என்றால் வளர்ந்து வரும் சமுதாய மாற்றத்தில் மற்றும் வளர்ச்சியில் சிக்கிக் கொண்டு தாத்தா-பாட்டி ஆகியோர் ஒன்று முதியோர் இல்லங்களில் அடைக்கலமாகின்றனர் இல்லையென்றால் நெடுந்தொடர்களில் அடைக்கலமாகின்றனர். இதனால் இவர்களின் அன்பும் போதிய அளவில் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
கதை சொல்வது என்பது எத்தகைய நல்ல கலாச்சாரம். குழந்தைகளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளில் கதை சொல்லுதல் பற்றி பல நல்ல முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வீட்டுவெளிகளில் அமர்ந்து கொண்டு தாத்தா-பாட்டியிடம் கதைக்கேட்கும் பாக்கியம் எத்தனை குழந்தைகளுக்கு வாய்த்து விடுகிறது.
தொடர்ந்து பிஞ்சு மனங்களை புண்படுத்தும் விதமாகவே நடந்துவரும் நமது சமுதாயம் சமீபகாலங்களாக கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. பல சமுதாய சீர்கேடுகளில் சிக்கிக் கொண்டு பல திறமைசாலிகளை பிஞ்சிலேயே பறிகொடுத்து வரும் நிலையிலேயே நாம் உள்ளோம். குழந்தைகளுக்கு எதிராக நம் சமுதாயம் செயல்படுத்திவரும் பாலியல் கொடுமைகள், புறக்கணிப்புகள் ஆகியவை கணக்கிலடங்காத வண்ணம் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் கொடுமையின் உச்சமாக நடந்தேறியுள்ளது. 4 வயதுக் குழந்தையை அதன் பெற்றோர் நாயுடன் சேர்த்து சங்கிலியில் பிணைத்து விட்டு வேலைக்கு சென்ற கொடுமையைப் பத்திரிகையில் பார்த்தவர்களின் மனம் பதறியது. பசியால் மயக்கமடைந்த நிலையில் இருந்த அந்தக் குழந்தை பத்திரிகை வைக்க வந்த உறவினர் கண்களில் பட்டு மீட்கப் பட்டுள்ளது. அந்தக் குழந்தையின் பெற்றோர் தற்போது நீதியின் பிடியில்…. அவர்கள் தொடர்ந்து இதை நடத்தி வந்திருந்தது விசாரணையில் வெளிச்சமாக்கப் பட்டுள்ளது. குழந்தை வேறு எங்கேயும் சென்று விடாமல் இருக்கவே தாங்கள் அவ்வாறு செய்ததாக அவர்கள் கூறிய காரணம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
தற்போதைய சூழலில் ஆண்-பெண் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியதின் அவசியம் அதிகரித்துள்ளது. ஆயினும் நாயின் பிடியில் குழந்தையை விட்டு செல்ல வேண்டியதன் அவசியம் என்ன? வேறு ஒரு வழிமுறையும் கிடைக்கவில்லையா? என்ற கேள்வியே நமக்கு எழுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர், வெளிநாட்டில் விடுதியில் தங்கி வாழ்ந்துவந்த பெண் யாருக்கும் தெரியாமல் கழிவறையில் தன்னுடைய குழந்தையைப் பெற்றெடுத்து அதை அங்கேயே கொன்ற செய்தி தாய்மை என்ற வார்த்தையையே கேள்விக்குறியாக்கும் சம்பவமாக அரங்கேறியிருந்தது.
சமுதாயம் வேகமாக வளர்ந்து வரும் இந்த சூழ்நிலையில் தாய்மை, பாசம் இவையெல்லாம் கடைச்சரக்காகக் கூட கிடைப்பது என்பது அரிதான விஷயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை வளர்ப்பில் இத்தகைய விஷயங்களே கட்டாயத் தேவையாக உள்ளது என்பதை பலவித ஆராய்ச்சிகள் ஒருபக்கம் உரத்துக் கூறிக் கொண்டுதான் இருக்கின்றன.
சமீபத்தில் தீபா ராஜகோபால் என்பவரால் இயக்கப்பட்ட ‘பிஞ்சுமனம்’ என்ற குறும்படம் குறித்து இங்கு பேசுவது உசிதமாகப்படுகிறது. தானே வளர்ச்சியடையாத நிலையில் அடுத்த உடன்பிறப்பின் ஆளுமையை எதிர்கொள்ள இயலாத ஒரு குழந்தையின் மனநிலை இந்தக் குறும்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
2.18 நிமிடங்கள் மட்டுமே திரையில் ஓடக்கூடிய இந்த குறும்படத்தின் சாராம்சம் இதுதான். 5 வயது இருக்கக்கூடிய காவ்யா ஒரு தாளில் ஓவியம் வரைந்துக் கொண்டிருக்கிறாள். அவளின் அம்மா தனது இரண்டாவது குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவ்யா, மிக விரைவாக ஓவியத்தை முடித்துவிட்டு, ஓடிவந்து அதைத் தன் தாயிடம் காண்பிக்கிறாள். அதை வாங்கி பக்கத்தில் வைக்கும் காவ்யாவின் அம்மா, தொடர்ந்து தன் இரண்டாவது குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். இதைக் கண்ட காவ்யா, வருத்தம் மேலிட தன் அறைக்குச் சென்று கட்டிலில் வருத்தத்துடன் படுத்துக் கொள்கிறாள். அவள் அன்னையுடன் எடுத்துக் கொண்ட போட்டோ, மற்றும் சுவரில் மாட்டப்பட்டுள்ள ஒரு பொம்மை இரண்டும் வருத்தமான அவளின் பார்வையில் படுகின்றது. வாழ்க்கை இத்தனை சோகமயமானதா என்ன? சிறிது நேரத்தில் அவள் வரைந்த காகிதத்துடன் காவ்யாவின் அறைக்கு வரும் அவளுடைய அன்னை அதை பெருமிதத்துடன் சுவரில் ஒட்டுகிறாள். பின்பு தூங்குவதாக பாசாங்கு செய்யும் காவ்யாவின் தலையை வருடி முத்தமிடுகிறாள். அவள் போகும்வரை தூங்குவதாகவே தன்னுடைய பாசாங்கைத் தொடரும் காவ்யாவின் பார்வை தற்போது அதே போட்டோ மற்றும் பொம்மையின் பக்கம் திரும்புகிறது. வாழ்க்கை இவ்வளவு அழகானதா என்ன?
நிமிடப்பொழுதுகளில் இத்தகைய உணர்ச்சிப் போராட்ட மாறுதல்களை படம்பிடிக்க முடியும் என்பதை இயக்குனர் நிரூபித்துள்ளார். இயல்பாகவே அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கும் பிஞ்சு உள்ளங்களின் இயல்பை தன்னுடைய நடிப்பால் விளங்க வைக்கும் காவ்யா கவனிக்கப்பட வேண்டியவர்.
பிஞ்சுமனம் என்ற தலைப்பில் இத்திரைப்படத்தினை இயக்கிய தீபா ராஜகோபால் குழந்தைகளின் மனோபாவத்தினை வெகுத் துல்லியமாக படம்பிடித்துள்ளார்.
வளர்ந்து வரும் சமுதாய மாற்றத்தை மட்டுமே காரணம் கூறிக் கொண்டு நாம் பிஞ்சு உள்ளங்களை கவனிக்கத் தவறி விடுகிறோம். தன் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ள நினைக்கும் அனைவருமே பெரும்பாலும் குறிப்பிடும் காரணங்களில் ஒன்று, தன்னுடைய குழந்தையின் எதிர்காலம் என்பதே. நிகழ்காலத்தை இருட்டாக்கிவிட்டு எதிர்காலத்திற்கு வெளிச்சத்தை தேடும் குருட்டு மனப்பான்மை நம்முடைய சமுதாயத்தில் விலக்க முடியாத ஒன்றாகி விட்டுள்ளது.
நாம் என்னதான் செய்வது… வேலை என்று சென்றுவிட்டால் குழந்தைகளைக் கவனிப்பது என்பது இரண்டாம்பட்சமாகி விடுகிறதே.. என்று கவலைப்படுவதை விடுத்து அதற்கான தீர்வுகளை நாம் கையில் எடுத்துக் கொள்வது வருங்கால சந்ததியினருக்கு நலம் பயக்கும்.