காளியூட்டு

அக்டோபர் 30, 2007 at 1:00 பிற்பகல் (Article)

பழமை மரபு மாறாமல் ஒரு புதினத்தைப் புதிய தளத்தில் தர முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்தப் புதினம். சுதந்திரக் காலக்கட்டத்தினை தனது நடையின் மூலம் இயல்பாக கொண்டுள்ள இந்தப் படைப்பு, அந்த கால மக்களின் வாழ்வியல்களைத் தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்பும், அடைந்த பின்புமான ஒரு கிராமத்து மக்களின் இயல்பை கூற முற்பட்டிருப்பது சிறப்பு.

“சுதேசமித்திரன் படிக்கப்பட்டு பொருள் சொல்லப்படுகிறது. சுயராச்சியம் வருமா வராதா என்ற தர்க்கம் நடக்கிறது. கூர்ந்து கவனித்தால் அது வேண்டுமா-வேண்டாமா என்ற திசைகளிலும் மாறிச் செல்லும்”

என்பன போன்ற வரிகள் அந்த காலத்து மக்களிடையே அரசியல் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது என்ற விவாதங்களுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.

சுதந்திரம் என்றால் என்ன, சுயராச்சியம் என்றால் என்ன என்பன போன்ற உலகியல் ஞானம் குறைந்த ஒரு கிராமத்து மக்களின் வாழ்க்கைநிலைப்பாட்டைக் கூற முற்படும்போது அவர்களின் அரசியல் அறிவை உயர்த்திக் காட்டக் கூடாது என்ற முனைப்புடன் ஆசிரியர் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார். சிறிய இடங்களையும் கவனத்துடன் கையாண்டுள்ளதற்கு இது உதாரணம்.

இதை மற்றொரு இடத்திலும் அழகாக கையாண்டுள்ளார்.

“நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது என்று தெரிந்தபோதும் கூட தாங்கள் இருந்து கொண்டிருக்கும் பிரதேசம் இப்போது எங்கிருக்கிறது என்று தெரிந்து கொள்ளாத மேலூர் வாசிகள். சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதுங்கூட தாங்கள் யாருடைய பிரஜைகள் என்பதை ஐயந்திரிபற சொல்ல முடியாத மாந்தர்.”

இத்தகைய வரிகளில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டோர் தவிர்த்து மற்றவர்களின் மனதில் சுதந்திரத்தைப் பற்றிய தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதை மறைமுகமாக புரிய வைக்க முயன்றுள்ளதைப் பாராட்டவேண்டும்.

வாசிப்பு அனுபவம் என்பது வாசகனை உணர்வு ரீதியான வெளியில் இட்டு செல்லவேண்டும். படைப்பின் காலகட்டத்தை உணர வைக்க வேண்டும். அத்தகைய முயற்சியில் இப்படைப்பு வெற்றிக் கண்டுள்ளது. அந்த கால பழக்க வழக்கங்கள், மனிதர்களின் வெகுளித்தனம், இனவேற்றுமைகள், வட்டார வழக்குகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், ஆட்சிநிலை, சமயம் சார்ந்த நம்பிக்கைகள் ஆகிய அனைத்தையும் கதைத்தளத்தில் நம்மை உணர வைக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ள நடை இனிமை பயப்பதாக உள்ளது.

சிறுவயதில் ஊரைவிட்டுப் போன சிவதாணு என்பவரின் கதையை எடுத்துக் கொண்டு அதைப் பல்வேறு தளங்களில் விரிவாக்கி கதையின் ஊடாக மேற்கூறிய விஷயங்களைக் கூற முற்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது.

ஒரு சிறந்த புதினம் என்பது பக்கங்களை கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. வாசகனின் மனத்தில் அது பதிவு செய்யும் காயங்களையும், அழுத்தங்களையும் உள்ளிட்டே படைப்பின் தாக்கம் அமையும். அந்த வகையில் இந்த நாவல் படிப்பவரின் உள்ளத்தில் அழுத்தங்களை பதிவுசெய்வதோடு மட்டுமில்லாமல் வரலாற்று நிகழ்வுகளையும் பதிவு செய்யும்.

இத்தகைய பதிவுகளுடன் சமய நம்பிக்கைகளையும், கூடவே திருவிழா குறித்த நிகழ்வுகளையும் கூற முற்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது. திருவிழாக்களில் இடம்பெறும் வில்லுப்பாட்டுகள் முதலியவற்றைப் பற்றிய பதிவுகளுடன் கூடவே அக்கால கட்டங்களில் இத்தகைய நாட்டுப்புற கலைகளின் ஊடாக எவ்வாறு தேசியம் வளர்க்கப்பட்டது என்பது புரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு பற்றியப் புரிதல் இல்லாதவர்களுக்கு இது உதவும்.

காளியூட்டு என்பன போன்ற திருவிழாக்களின் காரண காரியங்களையும் பாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்த முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண் தெய்வ வழிபாடு குறித்த தெளிவையும் கதையின் ஓட்டத்திலேயே கூற முற்பட்டுள்ளதை வரவேற்கலாம்.

“காரணம் எதுவும் இல்லாம – பிடிபடாம ஆனா தானா தோணி ஒரு அமைதியைக் கொடுக்கிறதைத்தான் கடவுள்னு சொல்லிக்கிட்டு வாரோம்.” – என்பன போன்ற வரிகளில் சமய நம்பிக்கைகளின் காரணங்கள் தெளிவுப்படுத்தப் பட்டுள்ளன.

அக்கால சொத்து பங்கீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. நில உரிமைகள் எவ்வாறு தோன்றியிருக்கும் என்பன குறித்த விளக்கங்கள் வியப்பேற்படுத்துகின்றன. உயிர்ப்பலிகள் எவ்வாறு தாழ்த்தப் பட்டவர்களின் சவக்குழிகளுக்குக் காரணமாக இருந்தது என்பனக் குறித்த விளக்கங்கள் தற்போது நடக்கும் இத்தகைய இழிநிலைகளுடன் ஒப்பு நோக்க வைக்கின்றன.

மொத்தத்தில் பக்கங்களில் வார்த்தைகளை இட்டு நிரப்பும் புதினங்களுக்கு மத்தியில் குறைந்த பக்கங்களில் தரமான புதினத்தைத் தரமுடியும் என்பது இப்படைப்பின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. மரபு மாறாமல் வெளிவந்துள்ள இத்தகைய படைப்புகள் மூலம் தற்காலப் படைப்பாளிகளின் கலாச்சாரத் தேடல்களுக்கு விடை கிட்டும்.

காளியூட்டு
ஆசிரியர்: மா. அரங்கநாதன்
வெளியீடு: காவ்யா
16, 2-வது குறுக்குத் தெரு,
டிரஸ்ட்புரம்,
கோடம்பாக்கம், சென்னை- 600 024.
ஆண்டு: டிசம்பர் 2006.

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

கொங்கைத்தீ

அக்டோபர் 27, 2007 at 12:57 பிற்பகல் (Article)

பொறுமைக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் ஒரு பெண்ணுக்குள் இருக்கும் சீற்றம் எத்தகையது, அது எவ்வளவு தூரம் தீவிரமானது என்பதை நிரூபித்தவள் கண்ணகி. தன் கணவன் தன்னை விட்டு நீங்கினாலும் அவனுக்கு அதனால் மகிழ்ச்சி கிடைக்கிறதே என்ற மனநிறைவுடன் அப்பழுக்கில்லா வண்ணம் வாழ்ந்திருந்த கண்ணகி எவ்வாறு தன் கொங்கைத்தீயின் மூலம் ஒரு மாநகரத்தையே எரிக்கும் அளவிற்கு சக்தியும் துணிவும் பெறுகிறாள்? எந்தெந்த சம்பவங்கள் அவளை அதற்குத் தூண்டுகின்றது என்று கூறும் காப்பியம் சிலப்பதிகாரம்.

இந்தக் காப்பியத்தை நவீனப்படுத்தி, பெண்களின் மனநிலையில் கூறமுற்பட்டிருந்தனர், எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி மாணவிகள். வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நாரதகான சபாவில் நடைபெற்ற இந்த நாடக அரங்கேற்றத்தில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதற்கு எழுத்து வடிவம் கொடுத்திருந்தவர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. இந்த காப்பிய நாடகத்திற்கு செயல்வடிவம் கொடுத்து இயக்கியவர் கர்ணா பிரசாத். ஏறக்குறைய 1 மாத காலமாக பயிற்சி கொடுத்து இந்த நாடகத்தை அரங்கேற்றியதாக அவர் கூறிய செய்தி, நடித்த அனைவரது நடிப்பாற்றலிலும் வெளிப்பட்டது.

பெண் காளியின் வடிவம். அவளுக்குள்ளிருந்து பிறந்ததே தெய்வப் பாத்திரங்களாக நாம் உருவகப்படுத்தும் கண்ணகி, திரௌபதி, மாதவி போன்றவர்கள் என்ற கருத்தினை நாடகத்தின் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தியிருந்தது சிறப்பு.

தன்னுடைய வீட்டுக் கடமைகளை ஆற்றிக் கொண்டே அதில் தன் வாழ்வின் முழுமையை காணுமாறு வளர்க்கப்பட்ட பெண், வறியோர்களை போற்ற வேண்டுமானால் தன் கணவன் உடனிருக்க வேண்டுமே என்று கவலையுறும் அளவிற்கு இருக்கும் ஒரு பெண்ணிடம் கலை மிளிரும் அழகுணர்வை வெளிப்படுத்தும் செயல்களை எதிர்பார்த்த கோவலனின் அறியாமை நாடகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்ணகியின் தோழிகள் மற்றும் கோவலன் தோழர்கள் என இரு குழுவினரை வைத்து இரதரப்பு நியாயங்களைப் பேசவைத்திருப்பது நல்ல முயற்சி. கண்ணகியின் தோழி தேவந்தியின் குழுவினர் சூழ்நிலையை பெண்ணிய நோக்கோடு அணுகியிருப்பதும் நல்ல முயற்சி. கோவலன் மாதவியிடம் இருந்து திரும்பி வந்ததும் ‘சிலம்பு உள்ளது கொள்ளுங்கள்’ என்று கூறும் கண்ணகியையும் தன்னுடன் மதுரைக்கு அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம் என்ன? என்று கேள்வி எழுப்பும் இவர்கள், அதற்கான காரணமாக, கோவலன் எப்போதும் தேடல் உடையவன். அது கலைஞர்களுக்கே உள்ள இயல்பு. அவனுக்கு பூம்புகார் என்ற சிறிய வட்டத்திற்குள் இருந்து சலிப்பாகி விட்டது. அதைவிடுத்து உலகைக் காண விழையும் அவனுக்கு மனைவி கண்ணகியின் கற்பே அரண் என்று கூறியிருப்பது வித்தியாசமான மாற்றுச் சிந்தனை.

கண்ணகியை மதுரைவரை வழிநடத்தும் கவுந்தியடிகள் இவள் போகும் வழியெங்கும் உள்ள காட்டின் அதிர்வைத் தாங்குவாளா என்று கேட்பதும், அதற்கு கண்ணகி வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் பலவிதமான அதிர்வைத் தாங்கியவண்ணம்தான் தான் இருந்ததாகக் கூறுவதும் சமுதாயத்தில் பெண்ணின் நிலையைக் குறிப்பிடுவதாக உள்ளது.

மதுரையில் கணவன் இறந்த விஷயத்தைக் கேள்வி பட்டதும், பூம்புகாரில் தான் கணவன் இருந்தும் கைம்பெண், மதுரையில் கணவன் இறந்ததால் கைம்பெண் என்று கண்ணகிக் கூறுவதாக இடம்பெற்றுள்ள இடங்கள் விவாதங்களுக்கான புதிய தளங்களைத் தோற்றுவிக்கின்றன. மேலும் தான் கைம்பெண்ணாக வாழ மாட்டேன் என்று கண்ணகி சூளுரைப்பதும் கோடிட்டுக் காட்ட வேண்டிய பகுதியாகும்.

மேலும் ‘தன் கணவன் கள்வன்’ என்று பாண்டிய மன்னன் கூறும் இடத்தில், ‘ஆமாம் அவன் கள்வன்தான், கணிகையரின் உள்ளம்கவர் கள்வன்’ என்று கண்ணகி கூறுவதாக வருமிடங்கள் பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெற்று விடுகின்றன.

பாண்டியன், கண்ணகி யார் மனிதகுலப்பெண்ணா? பிடாரியா? என்று கேட்கும் இடத்தில்… ‘ஆம் நான் மனிதகுலப்பெண், தவறுகண்ட இடத்து பிடாரி, கொடுமை கண்டு எழும்போது கொற்றவை…  அநீதி இழைக்கப்படும் இடத்தில் பத்ரகாளி…’ என்று கூறும் இடங்களில் எழுத்துவடிவம் கொடுத்த இந்திரா பார்த்தசாரதியின் கைவண்ணம் தெரிகிறது.

இறுதியில், தன் தவறை உணர்ந்த பாண்டியன் இறக்கும் இடத்தில், ‘பெண்மையின் சீற்றத்திற்கு இதுவே முதல் பலி’ என்று கண்ணகி கூறுவதுபோல் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் ஆசிரியர் முன்நிற்கிறார்.

மாதவியாக இரண்டுபேர் களமிறங்கியிருப்பது புதுமை முயற்சி. ‘மாதவியின் கலைக்கு விலையில்லை. ஆனால் அவளுக்கு விலையுண்டு’ என்று கூறுமிடங்களில், தன் விருப்பத்திற்காக கணிகையர் என்ற ஒரு இனத்தையே ஏற்படுத்தி வைத்திருந்த ஆண் சமுதாயத்தின் ஆதிக்கநிலை மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. கோவலன் மாதவியை ‘பொதுஇடத்தில் ஆடக்கூடாது’ என்று கூறுமிடத்திலும் ஆண்சார்பு கொள்கைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

யானையிடமிருந்து ஒரு முதியவரையும், காவல்பூதத்திடம் பாதிக்கப்பட்ட ஒருவருக்காக போராடும்போது நல்ல பண்பிற்குரியவனாக காட்டப்படும் கோவலன், எவ்வாறு ஆணாதிக்க உணர்வுடன் செயல்பட்டான் என்பதையும் காட்சிக்கு காட்சி நினைவூட்ட நாடகக்குழுவினர் தவறவில்லை. அழகிருந்தும் அதைப்புரிந்துக் கொள்ள இயலாவிடில், அருகிருந்தும் அது வீண் என்று கண்ணகியைப் பார்த்து கோவலன் கூறுவதாக அமைந்திருந்த இடங்கள் சிறப்பு.

இத்தகைய அழகிய சொல்லாடல்களைப் பயன்படுத்திய இந்தரா பார்த்தசாரதியை பாராட்ட வேண்டும். பல இடங்களில் இத்தகைய சொல்லாடல்கள், இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தை நம்கண்முன் நிறுத்துவதாக அமையப் பெற்றுள்ளது.

நடித்தவர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். அதிலும் கோவலன் மற்றும் கண்ணகியாக பாத்திரமேற்றிருந்த மாணவிகள் கவனிக்கத் தக்கவர்கள். மாதவியை அவளுடைய அரங்கேற்றத்தில் அறிமுகம் செய்யும் இடத்தில் ஒரு சிறிய நாட்டிய நிகழ்வையே மேடையேற்றியிருந்த இயக்குனர் கர்ணா பிரசாத் பாராட்டுக்குறியவர்.

காட்சிக்குக் காட்சி மேடைத் தோற்றத்தை மாற்றி அமைத்திருந்ததும் சிறப்பு. யானை போன்றவற்றை காட்சிப் படுத்தியிருந்ததைப் பாராட்டியே தீர வேண்டும். கொற்றவை தெய்வத்தையும், சாமியாடல் முதலியவற்றையும் நம் கண்முன்னே கொண்டுவந்த இயக்குனர் மற்றும் ஒப்பனையாளர் கவனத்திற்குரியவர்கள். கண்ணகி நல்ல நிலையில் இருக்கும்போது ஒரு ஒப்பனையும், அவளே கோவலனால் வறுமைக் கோலம் கொண்டபோது வேறொரு ஒப்பனையும் என்று மாற்றியிருந்தது மற்றும் ஒளியமைப்பு முதலியவையும் மிக அருமையாக மேடையேற்றப்பட்டிருந்தது.

பெண்ணடிமைத்தனத்தை முதன்முதலில் கூறிய குடிமக்கள் காப்பியம் சிலப்பதிகாரம். அதில் பெண்ணியக் கருத்துக்களை, அந்தப் பெண்களின் வலி மற்றும் மனக்குமுறல்களை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தியிருந்தது சிறப்பு. முழுவதும் பெண்களாலேயே அரங்கேற்றப் பட்டிருந்த இதைப்போன்ற  நாடகங்கள் பெண்ணிய வரலாற்றில் முக்கிய இடம் பெறும். கொங்கைத்தீ பல்வேறு தளங்களில் பார்வையாளர்களின் மனதில் தீமூட்டியது.

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

பிஞ்சு மனம்

அக்டோபர் 25, 2007 at 9:47 மு.பகல் (Article)

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படுமா?

தாத்தா-பாட்டி ஆகியோரின் மடியில் செல்லம் கொஞ்சிக் கொண்டு அவர்களின் கைகளால் ஊட்டப்படும் உணவினை அவர்களைக் கொஞ்சமாவது சிரமப்படுத்தி விட்டு உண்பது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் கூறும் கதைகளை செவிமடுப்பது, தாய் தந்தையின் வழிகாட்டுதலின்படி நடப்பது, தம்பி-தங்கை அல்லது அண்ணா-அக்கா இவர்களிடம் செல்லச் சண்டையிடுவது, இவையனைத்திற்கும் இடையில் கல்வியிலும் கவனம் செலுத்துவது, விடுமுறை நாட்களில் உறவினர்கள் வீட்டில் இன்பமாக காலம் கழிப்பது இதெல்லாம் தான் சிறிது காலத்திற்கு முன்பு குழந்தைகளின் இயல்பான வாழ்க்கையாக இருந்தது.

தற்போதைய குழந்தைகளின் நிலையில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது. காலையில் அரக்கப்பரக்க தூங்கியும் தூங்காமலும், சாப்பிட்டும் சாப்பிடாமலும் பள்ளிக்கு செல்வது, பள்ளி முடிந்ததும், கிரீச் போன்றவற்றிடம் தஞ்சமடைவது, அதன்பின்பு பாட்டு, கராத்தே, போன்றவற்றில் கவனம் செலுத்துவது, வீட்டிற்கு திரும்பினாலும் தாய்-தந்தையரின் அன்பு போதுமான அளவில் கிடைக்காத நிலையில் ஏங்குவது போன்ற நிலையே உள்ளது. தாய்-தந்தையரின் அன்பு கிடைக்காதது ஒரு நிலை என்றால் வளர்ந்து வரும் சமுதாய மாற்றத்தில் மற்றும் வளர்ச்சியில் சிக்கிக் கொண்டு தாத்தா-பாட்டி ஆகியோர் ஒன்று முதியோர் இல்லங்களில் அடைக்கலமாகின்றனர் இல்லையென்றால் நெடுந்தொடர்களில் அடைக்கலமாகின்றனர். இதனால் இவர்களின் அன்பும் போதிய அளவில் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

கதை சொல்வது என்பது எத்தகைய நல்ல கலாச்சாரம். குழந்தைகளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளில் கதை சொல்லுதல் பற்றி பல நல்ல முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வீட்டுவெளிகளில் அமர்ந்து கொண்டு தாத்தா-பாட்டியிடம் கதைக்கேட்கும் பாக்கியம் எத்தனை குழந்தைகளுக்கு வாய்த்து விடுகிறது.

தொடர்ந்து பிஞ்சு மனங்களை புண்படுத்தும் விதமாகவே நடந்துவரும் நமது சமுதாயம் சமீபகாலங்களாக கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. பல சமுதாய சீர்கேடுகளில் சிக்கிக் கொண்டு பல திறமைசாலிகளை பிஞ்சிலேயே பறிகொடுத்து வரும் நிலையிலேயே நாம் உள்ளோம். குழந்தைகளுக்கு எதிராக நம் சமுதாயம் செயல்படுத்திவரும் பாலியல் கொடுமைகள், புறக்கணிப்புகள் ஆகியவை கணக்கிலடங்காத வண்ணம் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் கொடுமையின் உச்சமாக நடந்தேறியுள்ளது. 4 வயதுக் குழந்தையை அதன் பெற்றோர் நாயுடன் சேர்த்து சங்கிலியில் பிணைத்து விட்டு வேலைக்கு சென்ற கொடுமையைப் பத்திரிகையில் பார்த்தவர்களின் மனம் பதறியது. பசியால் மயக்கமடைந்த நிலையில் இருந்த அந்தக் குழந்தை பத்திரிகை வைக்க வந்த உறவினர் கண்களில் பட்டு மீட்கப் பட்டுள்ளது. அந்தக் குழந்தையின் பெற்றோர் தற்போது நீதியின் பிடியில்…. அவர்கள் தொடர்ந்து இதை நடத்தி வந்திருந்தது விசாரணையில் வெளிச்சமாக்கப் பட்டுள்ளது. குழந்தை வேறு எங்கேயும் சென்று விடாமல் இருக்கவே தாங்கள் அவ்வாறு செய்ததாக அவர்கள் கூறிய காரணம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

தற்போதைய சூழலில் ஆண்-பெண் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியதின் அவசியம் அதிகரித்துள்ளது. ஆயினும் நாயின் பிடியில் குழந்தையை விட்டு செல்ல வேண்டியதன் அவசியம் என்ன? வேறு ஒரு வழிமுறையும் கிடைக்கவில்லையா? என்ற கேள்வியே நமக்கு எழுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர், வெளிநாட்டில் விடுதியில் தங்கி வாழ்ந்துவந்த பெண் யாருக்கும் தெரியாமல் கழிவறையில் தன்னுடைய குழந்தையைப் பெற்றெடுத்து அதை அங்கேயே கொன்ற செய்தி தாய்மை என்ற வார்த்தையையே கேள்விக்குறியாக்கும் சம்பவமாக அரங்கேறியிருந்தது.

சமுதாயம் வேகமாக வளர்ந்து வரும் இந்த சூழ்நிலையில் தாய்மை, பாசம் இவையெல்லாம் கடைச்சரக்காகக் கூட கிடைப்பது என்பது அரிதான விஷயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை வளர்ப்பில் இத்தகைய விஷயங்களே கட்டாயத் தேவையாக உள்ளது என்பதை பலவித ஆராய்ச்சிகள் ஒருபக்கம் உரத்துக் கூறிக் கொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் தீபா ராஜகோபால் என்பவரால் இயக்கப்பட்ட ‘பிஞ்சுமனம்’ என்ற குறும்படம் குறித்து இங்கு பேசுவது உசிதமாகப்படுகிறது. தானே வளர்ச்சியடையாத நிலையில் அடுத்த உடன்பிறப்பின் ஆளுமையை எதிர்கொள்ள இயலாத ஒரு குழந்தையின் மனநிலை இந்தக் குறும்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

2.18 நிமிடங்கள் மட்டுமே திரையில் ஓடக்கூடிய இந்த குறும்படத்தின் சாராம்சம் இதுதான். 5 வயது இருக்கக்கூடிய காவ்யா ஒரு தாளில் ஓவியம் வரைந்துக் கொண்டிருக்கிறாள். அவளின் அம்மா தனது இரண்டாவது குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவ்யா, மிக விரைவாக ஓவியத்தை முடித்துவிட்டு, ஓடிவந்து அதைத் தன் தாயிடம் காண்பிக்கிறாள். அதை வாங்கி பக்கத்தில் வைக்கும் காவ்யாவின் அம்மா, தொடர்ந்து தன் இரண்டாவது குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். இதைக் கண்ட காவ்யா, வருத்தம் மேலிட தன் அறைக்குச் சென்று கட்டிலில் வருத்தத்துடன் படுத்துக் கொள்கிறாள். அவள் அன்னையுடன் எடுத்துக் கொண்ட போட்டோ, மற்றும் சுவரில் மாட்டப்பட்டுள்ள ஒரு பொம்மை இரண்டும் வருத்தமான அவளின் பார்வையில் படுகின்றது. வாழ்க்கை இத்தனை சோகமயமானதா என்ன? சிறிது நேரத்தில் அவள் வரைந்த காகிதத்துடன் காவ்யாவின் அறைக்கு வரும் அவளுடைய அன்னை அதை பெருமிதத்துடன் சுவரில் ஒட்டுகிறாள். பின்பு தூங்குவதாக பாசாங்கு செய்யும் காவ்யாவின் தலையை வருடி முத்தமிடுகிறாள். அவள் போகும்வரை தூங்குவதாகவே தன்னுடைய பாசாங்கைத் தொடரும் காவ்யாவின் பார்வை தற்போது அதே போட்டோ மற்றும் பொம்மையின் பக்கம் திரும்புகிறது. வாழ்க்கை இவ்வளவு அழகானதா என்ன?

நிமிடப்பொழுதுகளில் இத்தகைய உணர்ச்சிப் போராட்ட மாறுதல்களை படம்பிடிக்க முடியும் என்பதை இயக்குனர் நிரூபித்துள்ளார். இயல்பாகவே அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கும் பிஞ்சு உள்ளங்களின் இயல்பை தன்னுடைய நடிப்பால் விளங்க வைக்கும் காவ்யா கவனிக்கப்பட வேண்டியவர்.

பிஞ்சுமனம் என்ற தலைப்பில் இத்திரைப்படத்தினை இயக்கிய தீபா ராஜகோபால் குழந்தைகளின் மனோபாவத்தினை வெகுத் துல்லியமாக படம்பிடித்துள்ளார்.

வளர்ந்து வரும் சமுதாய மாற்றத்தை மட்டுமே காரணம் கூறிக் கொண்டு நாம் பிஞ்சு உள்ளங்களை கவனிக்கத் தவறி விடுகிறோம். தன் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ள நினைக்கும் அனைவருமே பெரும்பாலும் குறிப்பிடும் காரணங்களில் ஒன்று, தன்னுடைய குழந்தையின் எதிர்காலம் என்பதே. நிகழ்காலத்தை இருட்டாக்கிவிட்டு எதிர்காலத்திற்கு வெளிச்சத்தை தேடும் குருட்டு மனப்பான்மை நம்முடைய சமுதாயத்தில் விலக்க முடியாத ஒன்றாகி விட்டுள்ளது.

நாம் என்னதான் செய்வது… வேலை என்று சென்றுவிட்டால் குழந்தைகளைக் கவனிப்பது என்பது இரண்டாம்பட்சமாகி விடுகிறதே.. என்று கவலைப்படுவதை விடுத்து அதற்கான தீர்வுகளை நாம் கையில் எடுத்துக் கொள்வது வருங்கால சந்ததியினருக்கு நலம் பயக்கும்.

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

நெஞ்சு பொறுக்குதில்லையே…

அக்டோபர் 23, 2007 at 12:50 பிற்பகல் (Article)

பச்சிளங்குழந்தைகளுக்குப் பாலியல் தொழிலா? 

காலங்காலமாக பெண்ணுரிமைக்காக தலைவர்கள் பலரும்  உரிமைக்குரல் கொடுத்தவண்ணம் உள்ளனர். பெண்களுக்கெதிரான குற்றச் செயல்பாடுகளை எதிர்க்கும் விதத்தில் போராட்டங்கள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும், பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் ஒருபக்கம் அதிக அளவில் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.

வரதட்சணைக் கொடுமை, பாலியல் பலாத்காரங்கள் முதலியவை பஞ்சமில்லாமல் நடக்கின்றன. பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சமுதாயத்தின் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கெதிராக பூதாகாரமாக தலையெடுத்துள்ளன. இவையெல்லாவற்றையும் தகர்க்கும் விதத்தில் பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கும் உண்மையாக சமுதாயத்தில் வேறூன்றத் தொடங்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தல், ஆயுதக்கடத்தலுக்கு அடுத்தபடியாக பெண்குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருவது சமுதாயக் கேடாகத் தொடர்கிறது.

1980-ம் ஆண்டுகளில் 14-16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்பின் இந்த வயதுவரம்பு 10-14 ஆக குறைந்தது. சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்கிற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கடத்தப்பட்டு, பாலியல் தரகர்களிடம் விற்கப்படுவதாகவும், அவர்கள் சிறுவயதிலேயே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுவதாகவும் ஐ.நா.வின் போதை மற்றும் குற்றப்பிரிவு அலுவலகம் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியா, நேபாளம், வங்கதேசம் போன்ற தெற்கு ஆசிய நாடுகளில் பெண் குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். பெரிய பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டால் எய்ட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பல ஆண்கள் சிறு வயது பெண் குழந்தைகளுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதையே அதிகமாக விரும்புகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாகவே பெண் குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. நம் நாட்டில் சட்டங்களில் உள்ள ஓட்டைகளும் இதற்கு சாதகமாக உள்ளது. கடத்தல் போன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அதிகமாக மாட்டிக் கொள்வதில்லை. இதையும் மீறி சட்டத்தின்பிடியில் சிக்கிக் கொண்டாலும் விரைவிலேயே தப்பித்து விடுகிறார்கள். எந்தவித தண்டனையையும் அவர்கள் அனுபவிப்பதில்லை.  அதே குற்றத்தை திரும்பவும் செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.

கடத்தலின் மூலமாக பெண் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது ஒரு ரகம் என்றாலும் பல குழந்தைகள் குடும்ப சூழல் காரணமாக பெற்றவர்கள் மற்றும் உறவினர்களால் விற்கப்படுகிறார்கள் என்பதும் நடைமுறையில் உள்ளது. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவையே இதற்கும் காரணமாக உள்ளது. கட்டுப்பாடு இல்லாமல் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும் இதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே, பெற்றவர்களே குழந்தைகளை விற்கும் அவல நிலை மாறும். இதற்கு அவர்களை மட்டுமே நாம் காரணகர்த்தாவாக்க முடியாது. மக்களுக்கு மேற்கூறிய அடிப்படை உரிமைகளைத் தரத்தவறிய அரசாங்கத்தையும் நாம் குறைக்கூற வேண்டியுள்ளது. மக்கள்தொகை அதிகமாக உள்ள நமது நாட்டில் மனிதசக்தியை பயன்படுத்தி பல ஆக்கப்பூர்வ திட்டங்களை அரசு கொண்டு வருவது இந்த சூழ்நிலையை மாற்ற உதவும்.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. எயிட்ஸால் பாதிக்கப்பட்டு, ஐதராபாத்தில் உள்ள மறுவாழ்வு மையம் ஒன்றில் இருந்த மரு என்ற சிறுமி சமீபத்தில் இறந்தார். எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோயினால் பாலியல் கொடுமைகள் மறையும் என்ற எண்ணத்திற்கு மாறாக உலகில் மனித வக்கிரங்கள் எவ்வாறெல்லாம் புதிய வடிவில் அதற்கான தீர்வுகளைக் காண முற்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள நேர்ந்தால் வருத்தத்தை மீறிய சலிப்புணர்வே மிஞ்சுகிறது.

பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பல சிறுமிகள் ஊமையாகவும், மனநலம் பாதிக்கப்பட்டும் உள்ளனர், அவர்களுடைய வயதிற்கான கல்வி, விளையாட்டு சந்தோஷம், பாதுகாப்பு, அரவணைப்பு போன்ற எதுவும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. மாறாக எயிட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் பிடியில் அவர்கள் தள்ளப்படுகிறார்கள். மரு என்ற சிறுமியைப் போன்று எத்தனை சிறுமிகள் தனக்கு என்ன நேர்கிறது என்ற புரிதல் இல்லாமலேயே இறக்க நேர்ந்ததோ. வெளியில் தெரிவது ஒன்றிரண்டு விஷயங்கள் மட்டுமே. வெளியில் தெரியாமல் இதைப்போல எத்தனை சிறுமிகளின் வாழ்வு பலியிடப்பட்டுள்ளதோ. இதற்கெல்லாம் இந்த சமூகம் எதை பதிலாகத் தரப்போகிறது.

நொய்டாவில் பல பெண்குழந்தைகள் ஒரு காமக்கொடூரனால் சமாதியாக்கப்பட்ட கொடூர சம்பவம்  நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கான தீர்வு உடனடியாக வழங்கப்படவில்லையே. வழக்கு நடந்துக் கொண்டிருக்கிறது. அது முடிந்து தீர்ப்பு வெளியிடப்படுவதற்குள் மக்கள் அச்சம்பவத்தின் தாக்கத்தை மறந்தே விடுவார்கள்.

பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் இத்தகைய கொடுமைகளைத் தடுக்க ஐ.நா. ‘பரிசு’ என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் இத்தகைய பாலியல் கொடுமைகள் முடிவுக்கு வராவிட்டாலும் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்படும் என நம்பலாம்.

வஞ்சனைகளைக் கண்டால் மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா – என்பது பாரதியின் கூற்று. தனக்கு நேர்ந்தது வஞ்சனை என்று தெரிந்துக் கொள்வதற்கு முன்னரே அந்தக் குழந்தை இறக்க நேரிடுவது தான் கொடுமை.

அக்கினிக் குஞ்சை எடுத்து காட்டில் வைத்தால் காடு வெந்துத் தணியும் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் நம் சமுதாயம் பெண்குழந்தைகளுக்கு எதிராக இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அரசும் இதற்கெதிரான நடவடிக்கைகளை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது. நாட்டின் வருங்காலத்தை ஏற்கக் கூடிய ஆரோக்கியமான புதிய சமுதாயத்தினரை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கும் இந்த சமுதாயம் தன்னுடைய காம இச்சைக்காக பச்சிளம் குழந்தைகளை பலியாக்கும் அட்டூழியக் கொடுமைகளைத் தொடர்ந்தால் காடு வெந்து தணியாது… நாடு தான் வெந்துப்போகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

பெண்களின் காலக்கனவு…

அக்டோபர் 23, 2007 at 12:41 பிற்பகல் (Article)

சுற்றிலும் பச்சைப்பசேல் என புல்வெளி… மரக்கூட்டங்களுக்குள்ளே பழமையான கட்டிடங்கள்… ஆள் அரவம் குறைந்த சனிக்கிழமை மாலையில் இராணி மேரிக் கல்லூரியின் நிலை இவ்வாறிருக்க என்னடா இங்குதானே ‘ஆவண நாடகம்’ நடைபெறுவதாகக் கூறினார்கள் என்று நம் கை தன்னிச்சையாக அழைப்பிதழை மறுபரிசீலனை செய்கிறது. பின்பு அங்கிருந்த ஒருவரின் வழிகாட்டுதலில் கலை அரங்கத்திற்குள் சென்றால் ஏதோ மகளிர் திருவிழாவிற்கு வந்து விட்டோமோ என்ற பிரமையே நமக்கு  ஏற்பட்டது. கனிமொழி, தமிழச்சி, சரஸ்வதி, அருண்மொழி, கலாராணி, மங்கை, கீதா உள்ளிட்ட பலரும் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தனர். உள்ளே நுழையவே வழியில்லை. எல்லா வழிகளிலும் ஆர்வத்துடன் எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம்… எல்லாவற்றையும் கடந்து உள்ளே நுழைந்து பார்த்தபின்பே அவர்களின் ஆர்வத்திற்கான காரணம் என்னவென்று புரிந்தது.

மேடை, அலங்காரங்கள் இல்லாமல் ஒரு நாடகத்தை அரங்கேற்ற முடியுமா?… முடியும் என நிரூபித்திருக்கிறார்கள் ‘காலக்கனவு’ ஆவண நாடகத்திற்கு செயல்வடிவம் கொடுத்த அ.மங்கை, கூத்துப்பட்டறை கலாராணி, சரஸ்வதி மற்றும் வ.கீதா குழுவினர்.

நவீன நாடகத்தில் இதுவும் ஒரு வகை என்றாலும் பார்வையாளர்களையும் நாடக மாந்தர்களாக உள்நுழைத்திருப்பது புதுமையான உத்தியாக்கப் பட்டிருக்கிறது.

அக்டோபர் 13-ம் தேதி நடத்தப்பட்ட இந்த ஆவண நாடகத்தைப் பற்றி மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். வந்தவர்கள், வராதவர்கள் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் சரியாக  மாலை 4 மணிக்கு ஆரம்பித்தது தான் அது.

பெண்களின் அடக்குமுறைக் காலத்தில் ஆரம்பித்து படிப்படியான பெண்ணிய விடுதலைக்கான போராட்டத்தையும், அதற்கான ஆதரவினையும் ஆவணங்களின் துணைக் கொண்டு விளக்க முற்பட்டுள்ளது இந்த நாடகம்.

ஆரம்ப கால மதமாறுதலுக்கான விஷயங்களில் முக்கியமானதாக இருந்தது பெண்களுக்கான அடக்குமுறைகளே. இந்த அடக்குமுறைகளே, பாதிக்கப்பட்டவர்களைக் குறிப்பாக பெண்களை கிறித்துவ மதத்திற்கு மதம் மாற வைத்தது என்பன போன்ற கருத்துக்களை இந்த நாடகம் எடுத்துக் காட்டியது.

உண்மையான பெண் விடுதலைக்குப் பிள்ளைப் பெறும் தொல்லை அடியோடு ஒழிந்துப் போக வேண்டும். அது ஒழியாமல், சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாக இருந்தாலும் பெண்கள் பொதுவாக விடுதலை அடைந்து விடமுடியாது. 12.08.1928-ஆம் தேதியிட்ட குடியரசு இதழில் வெளிவந்த பெரியாரின் இந்த கருத்தைக் கூறிய நாடக்குழுவினர், அது என்ன சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வது என்பனப் போன்ற ஏளனக் கேள்விகளையும் கேட்கத் தவறவில்லை.

இந்த அளவுக்கு யோசிக்க வைத்த பெரியாருக்குக்கூட உந்துதலாக டாக்டர் முத்துலட்சுமி, மூவாலூர் இராமிர்தம் அம்மையார் போன்ற பெண்களே இருந்துள்ளார்கள் என்ற வரலாற்று உண்மைகளை இந்த ஆவண நாடகம் எடுத்துக் கூறியது நம்மை வியப்பில் ஆழ்த்தியது.

தேவதாசி இசைவேளாளர் வகுப்பைச் சேர்ந்த முத்துலட்சுமி, இராமாமிர்தம் போன்றவர்கள், ‘பொட்டுக் கட்டுதல்’ என்ற மரபில் வந்திருந்தாலும் அதையெல்லாம் உடைத்தெறிந்து வெளிவந்து அத்தகைய பெண்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடியதை குறிப்பிட்டது இளையத் தலைமுறைக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் வண்ணம் இருந்தது.

தேசாபிமானத்திற்கு சமமாக கற்பாபிமானத்தைக் (கற்பின் மேல் இருக்கவேண்டிய பற்று) கூறி வந்த அந்தக் கால சமூகத்தைச் சாடிய நாடகக் குழுவினர், பலவிதக் கலைகளில் சிறந்து விளங்கிய கே.பி.சுந்தராம்பாள் போன்றவர்களும் தன் கணவனுக்கு அடங்கி வாழ்ந்த வாழ்க்கை வரலாறுகளையும் படம் பிடிக்கத் தவறவில்லை.

ஒன்றும் தெரியாது என்று சமமான போட்டிக்கு அழைப்பு விடுத்த கணவர் கிட்டப்பாவுக்கு எதிராக தன் திறமையை நிரூபித்த கே.பி.சுந்தராம்பாளை, ‘நாய், தெரியாதென்று ஏமாற்றினாயோ…’ என்று கிட்டப்பா கேட்டது வரையிலான பதிவுகளும் இதில் இடம் பெற்றது சிறப்பு.

பெண்கள் விடுதலைப் போரில் ஊக்கத்துடனும், அதே சமயம் தன் குடும்பத்திற்கு தெரியாமல் மறைமுகமாகவும் கலந்து கொண்டதை ஒரு பாடலுடன் காட்சிப்படுத்தி பார்வையாளர்களையும் ஊக்கப்படுத்தியதையும் பாராட்டியே தீர வேண்டும்.

வேட்டி, அரைக்கை சட்டை மற்றும் சிவப்புத் துண்டுடன் வலம் வந்து போராட்டங்களில் கலந்து கொண்ட மணியம்மா என்பவர், மான் முட்டி உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை  ஏற்ற இறக்கத்துடன் பறை இசையுடன் கூடிய பாடல் மூலம் புரிய வைத்துள்ளனர்.

“ஆடு முட்டி கேட்டதுண்டு
ஆமை முட்டி கேட்டதுண்டோ
மாடு முட்டி கேட்டதுண்டு
மான் முட்டிக் கேட்டதுண்டோ”

இந்தப் பாடல் மூலம் அவரின் உயிரிழப்பையும் கேள்விக் குறியாக்கியுள்ளனர் இந்தக் குழுவினர்.

இத்தகைய பெண்களின் வேள்விகளாலும், இவர்களுக்கு ஆதரவுத்தீயாக குரல் கொடுத்த சுயமரியாதைக் கோட்பாடுகளிலும் கவரப்பட்டு 70 ஆயிரம் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றதைப் பெருமைப்படுத்தியது  காலக்கனவு எனும் இந்த ஆவண நாடகம்.

இதில் முக்கியமாய் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினரும், இந்த ஆவண நாடகத்தில் முழங்கியவர்களில் ஒருவருமான கவின்மலரின் பெற்றோர், இவர்களது திருமணம் பெரியாரால் நடத்தப்பட்ட முதல் இந்து-முஸ்லிம் திருமணம் என்ற செய்தி அரங்கில் வெளிப்படுத்தப்பட்டதும் கூடியிருந்தோரிடையே இனிமையைக் கூட்டியது.

இந்த நாடகத்தில், முழக்கமிட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் பொன்னி, சட்டக்கல்லூரி மாணவியாக அறிமுகப் படுத்தப்பட்ட இவரின் முழக்கத்திற்கு பெண்களுடன் சேர்ந்து ஆண்களும் கைத்தட்டலில் அரங்கை அதிர வைத்தனர். கல்பனா, ரேவதி போன்றவர்களின் நடிப்பும் பெண்ணியவாதிகளை யோசிக்க வைத்தது. இவர்களைத் தவிர அருண்மொழி, தமிழச்சி, அமுதா, யாழினி, அனிதா, நங்கை, ஓவியா, ஜெய்கணேஷ் போன்றவர்களும் கூட்டத்தினரிடையே முழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

“விவாத மேடைகளில் அனைத்து விஷயங்களையும் பேசிவிட்டு இறுதியாக 10 நிமிட அவகாசம் இருந்தால் பேசப்படும் விஷயமாக பெண் சுதந்திரம் உள்ளது” என்று சமூகத்தைப் பார்த்துக் குரல் எழுப்பும் அளவிற்கு உரிமையும், எழுச்சியும் கொண்டு தங்களது விடுதலைக்காக தாங்களே போராடிய பெண் போராளிகளின் போராட்டங்கள், பாரதியுகம் தொடங்கி சுயமரியாதைக் காலம் வரை செழித்திருந்தது. ஆனால் கால வெள்ளோட்டத்தில் அதைத் தலைமையேற்றுத் தொடர்வார் யாருமின்றிச் சுயநலச் சமூகத்தால் வழக்கம்போல நசுக்கப்பட்டதைக் கூறி ஒரு பாடலுடன் காலக்கனவு முடிக்கப்பட்டது.

ரோஜா முத்தையா நூலகத்தின் உதவியுடன் காட்சிக்குட்படுத்தப் பட்ட ஆவணங்களை நாடகம் முடிந்த பின்பும் பார்வைக்காக வைத்திருந்தது நல்ல அணுகுமுறை.

பெண் சுதந்திரம் என்பது எத்தனை பெண்களின் தியாகங்களுக்கு நடுவே செழித்து வளர்ந்தது என்பதைக் கூறிய இந்தக் காலக்கனவு, அந்தக்காலக் கனவுகளுடனேயே முற்றுப் பெற்றது. பாதியில் நிறுத்தப்பட்ட இத்தகைய போராட்டங்களின் தொடர்ச்சியான வழிமுறையைக் கூற முற்பட்டிருந்தால் நலமாக இருந்திருக்கும்.

அருமையான இந்த முயற்சியை, அனைவரும் அறியும்வண்ணம் பெரிய அளவில் செய்திருந்தால் சமூகத்தில் சிறிய அளவிலான சலசலப்பையாவது இந்தக் காலக்கனவு செய்திருக்கும். மேலும் வந்த அனைவரையும் சமமாக பாவித்து நாடாளுமன்ற உறுப்பினர் முதல் சாமானியர் வரை அனைவரையும் கீழே அமர வைத்தது நலம். ஆயினும், உள்ளே அதிக இடமின்மையால் வெளியில் நின்றுக் கொண்டிருந்ததைத் தவிர்த்திருக்கலாம். அனைவரும் காணும் வண்ணம் பெரிய அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இந்தச் செயல்பாட்டின் மூலம் நல்லப் படைப்புகளுக்கான மக்களின் ஏக்கமும், எதிர்பார்ப்பும் வெளிப்பட்டுள்ளது.

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

Hello world!

அக்டோபர் 23, 2007 at 12:31 பிற்பகல் (Uncategorized)

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

நிரந்தர பந்தம் 1 மறுமொழி